முழு மதுவிலக்கு ஏற்படும் வரை 'கள்' விற்பனையை அனுமதித்து அரசே புதிய கொள்கையை அறிவிக்க வேண்டும் என்றும் 21ஆம் தேதி நடைபெறுகிற 'கள்' இறக்கும் போராட்டத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எங்கள் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமையான மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்பதை பல்வேறு நிலைகளில் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வற்புறுத்தி வந்துள்ளோம். குறைந்தபட்சம் பகல் நேரங்களில் டாஸ்மாக் கடைகளை பூட்டிவிட்டு மாலை 6 மணிக்கு மேல் கடைகளை திறந்தால் மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்பு குறையும் என்றும் கேட்டிருந்தோம்.
கடை மூடும் நேரத்தை இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைத்து என்று நிர்ணயித்திருப்பதால் எந்தவொரு பயனும் இல்லை. ஆனால் பார் நடத்தும் ஆளும் கட்சிக்காரர்களுக்கு கொள்ளை லாபம் என்று சொல்கிறார்கள். 10 மணிக்கு மேல் 2 மடங்கு விலை வைத்து குடிக்க வருபவர்களிடம் அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை ஒட்டு மொத்தமாக பிடுங்கும் வேலைதான் நடைபெறுவதாக தெரிகிறது.
நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை அரசே கலர் சாராயமான விஸ்கி, பிராந்தியை விற்று மக்களுக்கு அவர்கள் உழைப்பால் கிடைக்கும் வருமானத்திற்கும், தினமும் விஸ்கி, பிராந்தி குடித்தால் ஈரல் வெந்து சாகக் கூடிய வகையில் உடல் நலக் கேட்டிற்கும் அரசே வழிவகுத்துள்ளது.
விஸ்கி, பிராந்தி போல ஸ்பிரிட் (எரி சாராயம்) கலக்கப்படாத இயற்கையான பானமானகள் தடை செய்யப்படும் நிலையை அரசு தொடர்வது நியாயம் இல்லை. பல லட்சம் விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து போராட்ட களம் காண இருக்கிறார்கள். அவர்களது முயற்சிக்கு அரசு ஆதரவு தர வேண்டும். 'கள்' இறக்குவது ஒரு தொழில் மட்டுமல்ல அதுவும் விவசாயத்தின் பகுதி.
'கள்' ஒரு உணவு பொருள் போன்றது. இதனால் கிராமப் பொருளாதாரம் மேம்படும். கலர் சாராயமான விஸ்கி, பிராந்தி சீரழிந்துவரும் ஏழை தொழிலாளர்களின் வருவாய்க்கும் உடல் நலத்திற்கும் பாதுகாப்பு தரக் கூடியது. எனவே ஒன்று முழுமையான மதுவிலக்கை அரசு அறிவித்து அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இல்லையேல் முழு மதுவிலக்கு ஏற்படும் வரை 'கள்' விற்பனையை அனுமதித்து அரசே புதிய கொள்கையை அறிவிக்க வேண்டும்.
21ஆம் தேதி நடைபெறுகிற 'கள்' இறக்கும் போராட்டத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எங்கள் முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று சரத்குமார் கூறியுள்ளார்.