தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை முட்டி 4 பேர் பலியானார்கள். மேலும் 140 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கன்னூர்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கார்த்திகேயன் (22), வேடிக்கை பார்க்க வந்த அந்தோணிசாமி (70) ஆகியோர் காளை முட்டி நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
திருக்கன்னூர்பட்டியை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அனைவரும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 123 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் வேடிக்கை பார்க்க வந்த அரசலூரை சேர்ந்த தங்கராஜ் (55) என்பவர் காளை முட்டி உயிரிழந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயம் 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.