இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4ஆவது நாளாக நீடிக்கிறது.
திருமாவளவனின் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்திருப்பதாகவும், இதனால் அவருக்கு மயக்கமும் தலைசுற்றலும் ஏற்பட்டதாகவும், இன்று காலை முதலே அவர் மிகவும் சோர்வாகக் காணப்படுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கூடவுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், திருமாவளவன் உண்ணாவிரதத்தைக் கைவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.