இலங்கை அரசுக்கு வெளிப்படையாக ராணுவ உதவிகள் செய்து வரும் இந்திய அரசை எப்படி நம்ப முடியும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்காக 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கூட்டணி கட்சித் தலைவர்களும் இணைந்து ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தினோம். கொட்டும் மழையிலும் சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை மனித சங்கிலி நடத்தினோம். பின்னர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் முதலமைச்சர் தலைமையில் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து போரை நிறுத்தும்படி வலியுறுத்தினோம்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் தலைவராக 10வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பேசிய முதலமைச்சர் கருணாநிதி, ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் விட தயாராக இருப்பதாக உருக்கமாகவும் கண்ணீர் மல்கவும் பேசினார். ஆறரை கோடி தமிழர்களின் முதல் குடிமகன் என்ற முறையிலும், உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழர்களின் தலைவர் என்ற முறையிலும் முதலமைச்சர் கருணாநிதி எத்தனையோ அழுத்தங்கள் கொடுத்தும், இந்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை மத்திய அரசு அனுப்பவில்லை. அதற்கான பொருத்தமான காரணத்தைக்கூட அவர்கள் தெரிவிக்கவில்லை. இலங்கையிலே பல மாதங்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும் அது பற்றி ஒரு வார்த்தை கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட இந்திய அரசை இனியும் எப்படி நம்பிக்கொண்டிருக்க முடியும்.
ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. 5 லட்சம் தமிழர்கள் முல்லைத்தீவில் அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள். ஆனால் இலங்கை அரசு ஈவு இரக்கமில்லாமல் அவர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நாம் பொறுமை காக்க முடியும்?
கூட்டணித் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு இந்திய அரசு மரியாதை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக வெளிப்படையாகவே இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது.
இந்திய அரசு இப்படி தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு எதிராக பச்சைத் துரோகம் செய்து வருகிறது. எனவேதான் வேறு வழியின்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினோம். இது தமிழக முதலமைச்சருக்கோ, தமிழக அரசுக்கோ எதிரானது அல்ல. இதனால் முதலமைச்சருக்கு சங்கடம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறேன். பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோருடன் முதலமைச்சரை சந்தித்த பிறகு நான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது.
இந்த தலைவர்களுடன் பல போராட்ட களங்களை நாங்கள் இணைந்து சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை பல கட்சிகளுடன் சேர்ந்து நடத்த முடியாது. நான் மற்றவர்களையும் இந்த போராட்டத்துக்கு வற்புறுத்த முடியாது.எனவேதான் நான் இதனை தன்னிச்சையாக முடிவு செய்தேன். எனவே என்னுடைய இந்தப் போராட்டம் முதலமைச்சரையோ, தோழமைக் கட்சி தலைவர்களையோ அவமதித்ததாகவோ, புறக்கணித்ததாகவோ யாரும் கருத வேண்டாம்.
முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஈழ விடுதலை ஆதரவாளர்களும் என்னுடைய போராட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனை கைவிடுமாறு கூறுவதை விட அனைத்து தலைவர்களும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விடயத்தில் இந்திய அரசை நிர்பந்தப்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒருமனதான தீர்மானத்தின்படி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.