இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 3-வது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்தி, தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னையை அடுத்த மறைமலை நகரில் திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கி உள்ளார். இன்று 3-வது நாளாக இந்த உண்ணாவிரத போராட்டம் நீடித்து வருகிறது.
உண்ணாவிரதத்தின் 3-வது நாளான இன்று திருமாவளவன் சோர்வாக காணப்பட்டார். ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவ குழுவினர் அவரது உடலை பரிசோதித்து வருகிறார்கள். இதற்காக மருத்துவர்கள் குழு ஒன்று உண்ணாவிரத மேடை அருகில் ஆம்புலன்சுடன் தயாராக இருக்கிறது. காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முந்தைய நாள் இரவில் மேடையிலேயே அவர் படுத்து தூங்கினார். அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் திருமாவளவனுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருப்பதாக தெரிவித்தனர்.
சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதால், தண்ணீர் மட்டும் குடித்து வருவதாக, திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே முதலமைச்சர் கருணாநிதியின் அளித்த வாக்குறுதியை ஏற்று திருமாவளவன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில், உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளன.
''அழிவின் விளிம்பில் 5 லட்சம் தமிழர்கள், இந்திய அரசே இலங்கை போரை நிறுத்து, அமைதிப்பேச்சு வார்த்தை நடத்து'' என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதற்கிடையே கடலூர், மதுரை, சேலம் மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பேருந்துகள் தீ வைக்கப்பட்டன.