உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 78 பேர் காயம் அடைந்தனர்.தமிழகத்தில் மிகவும் பிரசித்த பெற்ற மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனையுடன் நடத்தப்பட்டது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க, மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்கள் தவிர தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நேற்று 400க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. பரிசோதனையின் போது 11 காளைகள் திருப்பி அனுப்பப்பட்டன. மருத்துவரிடம் அனுமதி பெற்ற 396 காளைகள் பங்கேற்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியை காணும் வகையில் காலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு ரூ.400 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மன் ஆகிய நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
காலை 10.10 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டில் முதல் மாடாக முனியாண்டி கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர் வரிசைப்படி காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் வாடி வாசல் வழியாகச் சீறிப்பாய்ந்தன.
பதிவு பெற்ற 232 வீரர்கள் களத்தில் இருந்து காளைகளை மடக்கிப் பிடித்தனர். கில்லாடிக் காளைகள் மூர்க்கத்தனமாக முட்டித் தட்டித் தள்ளி சீறிப்பாய்ந்தன. பல காளைகளை வீரர்கள் மடக்கிபிடித்தனர். காளைகள் முட்டியதில் 78 பேர் காயமடைந்தனர். இது கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்த அளவாகும்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளிக் காசுகள், செல்பேசிகள், கட்டில், பீரோ, சைக்கிள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகளை அடக்கியபோது காயமடைந்த வீரர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் உடனுக்குடன் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.