விமான நிலையங்களுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், உரிய அடையாள அட்டைகள் இல்லாமல் பயணிகள் அனுமதிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் செல்லவும் வரும் 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்துவதற்கு ஏதுவாக அயல்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவும், உள்ளூர் பயணிகள் 1 மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
தாமதமாக வரும் பயணிகள் எக்காரணத்தை கொண்டும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதேபோல் கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்குள் பார்வையாளர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.