இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடந்து வரும் மிருகத்தனமான தாக்குதலை கண்டித்தும், உடனடியாக இந்திய அரசு போர் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பா.ம.க. சார்பில் வரும் 20ஆம் தேதி மாநிலம் முழுவதும் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைவர் கோ.க.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ராஜபக்சே அரசு ஈவு இறக்கமில்லாமல் வான்வழியில் குண்டுவீசியும், ராணுவத்தால் சுட்டும் தமிழர்களை படுகொலை செய்து வருகிறது. உணவு, மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.
பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், அனாதை விடுதிகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஒன்று விடாமல் மொத்த தமிழினத்தையும் அழித்து ஒழித்து வருகிறது.
உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மனித உரிமை மீறல் நடக்கிறது. மிருகத்தனமான இந்த தாக்குதலை கண்டித்தும் உடனடியாக இந்திய அரசு போர் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தியும் வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநிலம் முழுவதும் தொடர் முழக்க போராட்டம் நடைபெறும்.
ஆட்சியத் தலைவர்கள் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் முன்பு ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்த வேண்டும். அந்தெந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று கோ.க.மணி கூறியுள்ளார்.