இலங்கையில் நடந்து வரும் இனவெறிப் போரை உடனடியாக நிறுத்தக் கோரியும், அமைதி பேச்சுவார்த்தை நடத்த கோரியும் இந்திய அரசை வலியுறுத்தி 2வது நாளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் நடக்கும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கட்சி நிர்வாகிகள் சிந்தனைச் செல்வன், வன்னிஅரசு, கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியய்யா தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
உண்ணாவிரதத்தை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்
இதனிடையே திருமாவளவனுடன் இன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உடல்நலம் கருதி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் ராமதாஸ் கூறியதாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக தாம் தெரிவித்ததாக கூறிய திருமாவளவன், இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்த சிவசங்கர் மேனனை அனுப்பியுள்ளதாக கூறப்படுவது இந்திய அரசு நடத்தும் நாடகமாகும். இதனால் தீர்வு எதுவும் ஏற்படப்போவதில்லை. இந்திய அரசே நேரடியாக தலையிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.
இதனை வலியுறுத்தி நாளை மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் மகளிர் பிரிவு சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று தெரிவித்த திருமாவளவன், எங்கள் போராட்டம் தமிழக அரசுக்கு எதிரானது அல்ல. இந்திய அரசுக்கு எதிரானது என்றார்.
போராட்டத்தின்போது விடுதலை சிறுத்தைகள் யாரும் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக் கொண்டார்.
நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன், திராவிட தமிழர் இயக்க பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் திருக்கச்சூர் ஆறுமுகம், டி.மூர்த்தி ஆகியோர் திருமாவளவனைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.