வேதாரண்யம் பகுதியில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பாததால் அப்பகுதியில் பதற்றம் காணப்படுகிறது.
தற்போது மீன்பிடி காலம் உச்சக்கட்டத்தில் உள்ளதால் நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தினசரி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகிறார்கள். ஆனால் மீன்பிடி தொழிலுக்கு இடையூறாக கடலில் திடீர் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த 12ஆம் தேதி வேதாரண்யம் அருகே உள்ள வானவன் மகாதேவி கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் கண்ணியப்பன், சண்முகம், நாச்சியப்பன் ஆகியோரும் அதே கிராமத்தை சேர்ந்த சித்திரவேலு விசைப்படகில் கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் 13ஆம் தேதியே கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் இன்று காலை வரை அவர்கள் திரும்பவில்லை. அவர்களைத் தேடும் பணியில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மீனவர்கள் இறங்கியுள்ளனர்.
மாயமான மீனவர்கள் கடல் கொந்தளிப்பால் கடலில் மூழ்கினார்களா? அல்லது அலையில் படகு அடித்துச்செல்லப்பட்டு வேறு இடத்தில் கரை ஒதுங்கினார்களா? என்று தெரியவில்லை.