தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் மக்கள் கொண்டாடினர்.
இன்று அதிகாலையிலேயே மக்கள் புத்தாடை உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்தாருடன் சேர்ந்து குலவையிட்டு பொங்கல் பண்டிகையை குதூகலமாக கொண்டாடினர்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் கருணாநிதியின் வீடு வண்ண விளக்குகளுடன் ஜொலித்தது.
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூர் வேம்புலி அம்மன் கோயிலில் கிராம மக்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி சாந்தா ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த சமத்துவ பொங்கலில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் கே.மிஸ்ராவும் கலந்து கொண்டார்.
முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், தி.மு.க.வினர் ஏராளமானோர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.