திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றியால், பிரதமராக வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தகர்ந்தது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் லதா அதியமானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், நாம் அனைவரும் மகிழும் அளவுக்கு திருமங்கலத்தில் தேர்தல் பணியாற்றி மாபெரும் வெற்றியை தந்துள்ள அழகிரி அநீதிக்கு அஞ்சா நெஞ்சன். கருணாநிதியை கண்டு அஞ்சும் நெஞ்சன். 1957ஆம் ஆண்டிலிருந்து தி.மு.க தேர்தலில் ஈடுபட்டு பெருவாரியான வாக்குகளை பெற்றும், பெறாமலும் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. ஆனால், இதுவரை இடைத்தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாறு இல்லை. இது அழகிரியின் கை வண்ணம், ஸ்டாலினின் செயல் திறன், தி.மு.க.வினரின் உழைப்பு.
அ.தி.மு.க.வும் அவர்களோடு புதிதாக கூட்டு சேர்ந்துள்ள கம்யூனிஸ்டு தோழர்களும் சேர்ந்து அழகிரி இந்த வட்டாரத்திலேயே இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரை சென்றனர். இப்போதுதான் புரிகிறது எதிர்க்கட்சிகள் தாங்களாகவே தோற்க தயாராக இருக்கிறோம்; அழகிரி இருக்க தேவை இல்லை என்று எண்ணினார்கள் போலும்.
இந்த இடைத்தேர்தலில் ஜெயித்து, அகில இந்திய அளவில் உருவாக இருக்கும் மூன்றாவது அணிக்கு முக்கியத்துவம் ஏற்படுத்துவேன்; அடுத்து வரும் மக்களவை தேர்தலில் ஜெயித்து என்னை பிரதமர் ஆக்க இருக்கிறார்கள்; எனவே விட்டுக்கொடு என்று வைகோவிடம் கேட்டு ஜெயலலிதா திருமங்கலத்தை பெற்றார்.
மூன்றாவது அணியில் சேர்ந்து பிரதமராகி விட வேண்டும் என்ற நினைப்பில்தான் ஜெயலலிதா இப்படி செய்தார். பீங்கான் வியாபாரி ஒருவன் பகல் கனவு கண்டு எட்டி உதைத்ததால் பீங்கான் கோப்பைகள் உடைந்து சிதறிய கதை நமக்கெல்லாம் தெரியும். அதே போல்தான் பிரதமர் பதவி கனவு ஜெயலலிதாவை பொறுத்த வரை உடைந்து சிதறிவிட்டது.திருமங்கலம் என்ற சொல் அழகு, மங்கலம் என்று பொருள். மங்கலத்தில் தொடங்கலாம் என்று நினைத்தவருக்கு திருமங்கலம் கைகொடுக்கவில்லை. அமங்கலமாக முடிந்து விட்டது. உதய சூரியனை கையும் ஆதரித்தது, கைவிட்டவர்களை பற்றி நாங்களை கவலைப்படாதவர்கள். ஏனென்றால், கழகத்திற்காக உயிரையும் தியாகம் செய்ய லட்சக்கணக்கான தம்பிகள் இருக்கிறார்கள். கழகத்தை அழிக்க நினைப்பவர்களை அவர்கள் ஒருகை பார்ப்பார்கள்.
அழகிரிக்கு உரிய நேரத்தில் பொறுப்பு
தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த அளவு கெடுபிடி செய்யாமலிருந்தால், நாம் வெற்றி பெற்றிருக்க முடியாது. நான்காயிரம், ஐந்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய இடத்தில் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
திருமங்கலம் என்னும் நெல்லிக்கனியை அந்த கனியின் பலனை கட்சிக்கு வழங்குவேன். அழகிரி, ஸ்டாலின் பற்றி பேராசிரியர் கூறினார். அழகிரிக்கு கருணாநிதி என்ன பொறுப்பு தரபோகிறார் என்று எதிர்பார்க்கிறார்கள். நானும் பேராசிரியரும் கலந்து பேசிய பிறகு அந்த கட்டளை வரும். கழகத்தை காக்கும் கட்டளையாக அது இருக்கும். அழகிரியின் குணநலம், வலிவு பார்த்து நிச்சயம் நல்ல பொறுப்பு உரியநேரத்தில் கிடைக்கும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.