தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 10 பேருக்கு விடுதலை பிணையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.
விடுதலைப் புலிகளை ஆதரித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் ஏற்பட்ட பிரச்சனையில் சத்தியமூர்த்தி பவன் அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட திருமாவளவன் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள், சத்தியமூர்த்தி பவன் மீது தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் 10 பேரும் விடுதலை பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 10 பேருக்கும் விடுதலை பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
10 ஆயிரம் ரூபாய் சொந்த பிணையும், அதே தொகைக்கான இரு நபர் பிணையும் வழங்க வேண்டும் என்றும் கடலூரில் தங்கியிருந்து அங்குள்ள காவல்நிலையத்தில் 4 வார காலத்திற்கு தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.