இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் குற்றம்சாற்றியுள்ளனர்.
முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக நாங்கள் மூன்று பேரும் கையெழுத்திட்ட மனு ஒன்றை முதலமைச்சர் கருணாநிதியிடம் கொடுத்துள்ளோம் என்றனர்.
இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது என்று குற்றம்சாற்றிய அவர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த போது ஒரு குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கான அமைதிபேச்சு வார்த்தைகள் நடைபெறுவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆதரவாக செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை முதலமைச்சரிடம் சுட்டி காட்டினோம் என்றும் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றுபட்டு எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் மரியாதை இல்லை என்று தெரிவித்த அவர்கள், இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை. அமெரிக்கா, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் எல்லாம் போரை நிறுத்தி விட்டு பேச்சு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன என்பதை நினைவுப்படுத்தினர்.
7 கோடி தமிழக மக்களும் எடுத்த முயற்சிகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மீண்டும் உடனடியாக மத்திய அரசிடம் பேசுங்கள் என்றும் போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்துங்கள் என்றும் முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவரும் இன்று பேசுவதாக சொல்லி இருக்கிறார். அதை ஒரு அறிக்கையாக வெளியிடவும் கேட்டு கொண்டுள்ளோம் என்று தெரிவித்ததாக கூறினர்.
இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளோம் என்று தெரிவித்த அவர்கள், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் தமிழர்களை அழிக்கும் முயற்சிக்கு துணை போவதாக இந்திய அரசின் நிலைப்பாடு இருக்க கூடாது. இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.