திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, தமிழக அரசின் தொடர் சாதனைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்று கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலில் தவற விட்ட வெற்றி வாய்ப்பு தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது என்றும் தமிழக அரசின் தொடர் சாதனைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகவே இந்த வெற்றியை கருதுகிறோம் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
இடதுசாரிகள், பா.ம.க. ஆதரவு இல்லாமல் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இடதுசாரிகள் ஆதரவு தராதது மட்டுமல்ல, கடுமையான விமர்சனம் செய்தார்கள். அதற்கு பிறகும் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று கருணாநிதி கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கு இதை முன்னோட்டமாக கருதலாமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, நாங்கள் வெற்றி பெறாவிட்டால் இந்த இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று எதிர்க்கட்சிகள் சொல்லி இருப்பார்கள். ஆனால் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்றார்.