Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் பாதுகாப்புப் பணி காவலர்களுக்கு ரூ. 500 பரிசு

Advertiesment
பிரதமர் பாதுகாப்புப் பணி காவலர்களுக்கு ரூ. 500 பரிசு
, திங்கள், 12 ஜனவரி 2009 (11:13 IST)
சென்னைக்கு அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் வந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு ஊக்கப் பரிசாக தலா 500 ரூபாய் அளிக்கப்படும் என முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நேற்று நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள், மாநாட்டில் வெளிநாடுகளில் வாழும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகவும், குடியரசுத் தலைவர், பிரதமர், சுரீனாம் மற்றும் மோரீஷஸ் ஆகிய நாடுகளின் குடியரசு துணைத் தலைவர்கள், வெளிநாட்டுத் தமிழர்கள் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாநாட்டை எத்தகைய நேரத்தில், என்னென்ன மிரட்டல்களோடு, என்னென்ன பயமுறுத்தல் செய்திகளோடு எல்லாம் நடத்த வேண்டியிருந்தது என்பதை காவல்துறை அதிகாரிகளும், மக்களும் நன்கு அறிவார்கள் என்று கூறிய கருணாநிதி, என்றைக்கும் நம்முடைய தமிழ்நாடு காவல் துறையினர் மிரட்டல்களுக்கு அஞ்சாதவர்கள், பயமுறுத்தல்களுக்குப் பதறாதவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்றார்.

குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர்களை மட்டுமல்லாது மாநாட்டில் பங்கேற்க வந்த வெளிநாட்டு பிரமுகர்களையும் பாதுகாத்த பெருமை நம்முடைய காவலர்களுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் உரியதாகும்.

அவர்களுடைய பணியைப் பாராட்டி இந்த மூன்று நாள் நிகழ்ச்சிகளை ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி பணிகளில் ஈடுபட்ட காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் பிற அரசுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் தலா 500 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று கருணாநிதி கூறினார்.

117 பெண்கள் உள்பட 716 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி நிறைவுக்கான சான்றிதழ்களும், பயிற்சியின்போது சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு பரிசுகளையும் முதல்வர் வழங்கினார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே. பி. ஜெயின் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள ரூ.500 ஊக்கத் தொகை மூலம் போலீசார் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் பலன் அடைவர்.

Share this Story:

Follow Webdunia tamil