எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, வருகிற 17ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அ.இ.அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 92-வது ஆண்டு பிறந்தநாளையொட்டி வரும் 17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரின் திருவுருவ சிலைக்கு, பொதுச்செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.
அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் 92-வது பிறந்தநாள் விழா மலரை வெளியிட்டு, தொண்டர்களுக்கு ஜெயலலிதா இனிப்புகளை வழங்குகிறார். பின்னர் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களின் குடும்பத்திற்கு குடும்ப நலநிதியுதவி வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், விவசாயபிரிவு, மீனவபிரிவு உள்பட பல்வேறு அமைப்புகளும், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.