அ.இ.அ.தி.மு.க நிறுவனரும், மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 92வது பிறந்தநாளையொட்டி வரும் 17ஆம் தேதி சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 92-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 17.1.2009 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும், மாநகராட்சிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
அறிவிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார்கள். மாவட்டச் செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளை மற்ற அணியினருடன் ஆலோசித்து பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எல்லா இடங்களிலும் எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு அல்லது படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.