வேலை நிறுத்தத்தை லாரி உரிமையாளர்கள் உடனடியாக விலக்கிக் கொண்டு மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சரக்கு வாகனங்களின் வேலை நிறுத்தம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்தால், நாள்தோறும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை குடும்பத்தோடு குதூகலமாகக் கொண்டாடி மகிழ காத்திருக்கும் பலதரப்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால், வேலை இழப்பை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.
லாரிகள் வேலை நிறுத்தம் மேலும் தொடர்ந்தால், தமிழகத்தில் வணிகமும், பொருளாதாரமும் முடங்கிப் போய்விடும். காய்கறி, பழங்கள் போன்ற வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைகளுக்கு அனுப்ப முடியாமல், அவை முற்றிலுமாக அழுகி போய்விடும்.
லாரிகளின் வேலை நிறுத்தத்தால், அனைத்து அன்றாட தேவை பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், பால் மற்றும் தண்ணீர் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகின்றன என்ற அறிவிப்பு வந்து கொண்டிருக்கிறது.
அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்தை சந்திக்க நேரிடும். இந்த ஆபத்தை தவிர்க்க தமிழக அரசும், முதலமைச்சரும் முன் முயற்சி எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்.
மாநில அரசு என்ன செய்ய முடியும் என்பது குறித்து அவர்களுடன் விவாதிக்க வேண்டும். பிற மாநிலங்களில் இந்த வேலை நிறுத்தத்தை சமாளிப்பதற்காக ''எஸ்மா'' போன்ற கடுமையான சட்டத்தை பயன்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலும் அத்தகைய நிலைமை ஏற்பட்டால் தவிர்க்க லாரி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள்விட வேண்டும். சரக்கு வாகன உரிமையாளர்களும், பண்டிகை காலத்தில் இதுபோன்ற வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்.
வேலை நிறுத்தத்தை உடனடியாக விலக்கிக் கொண்டு மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.