பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை திரையரங்குகளில் அதிகப்பட்டியாக 5வது காட்சி நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொது செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகளில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 14.1.2009 முதல் 18.1.2009 வரையுள்ள நாட்கள் அரசு விடுமுறையானதால் அதிகப்பட்டியாக ஒரு காட்சி, அதாவது 5வது காட்சி நடத்திக்கொள்ளலாம்.
மேலும், அரசு உத்தரவு படி, 19 மற்றும் 20ஆம் தேதியும் அதிகப்படியாக ஒரு காட்சி (5 காட்சிகள்) நடத்திக்கொள்ளலாம். அதே போல் நடமாடும் திரையரங்குகளுக்கு 19, 20 ஆகிய தேதிகளில் நண்பகல் காட்சிகள் நடத்திக்கொள்வதற்கும், 14 முதல் 18ஆம் தேதி வரை காலை காட்சிகள் நடத்திக்கொள்வதற்கும் அரசானை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு அதிகப்படியான காட்சிகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.