அத்தியாவசிய பணிகளுக்கு ஒத்துழைப்பு தராத மோட்டார் வாகனங்கள், ஓட்டுனர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 5ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம், டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், பேச்சுவார்த்தை மூலம் முடியாமல் தொடர்ந்து நீடிப்பது வருத்தத்தை தருவதாக உள்ளது.
இந்தநிலையில் அத்தியாவசிய பொருள்களை தேவையான இடங்களுக்குத் தங்கு தடையின்றி கொண்டு செல்ல தேவைப்படும் வாகனங்களை, மோட்டார் வாகனங்கள் கட்டாய எடுப்புச் சட்டம், 1970-ன் கீழ் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் கட்டாயமாக எடுத்து வாகன ஓட்டுனர்களை கொண்டு பெட்ரோல்-டீசல் போன்ற பொருள்களை எண்ணெய் நிறுவன சேமிப்பு முனையில் இருந்து காவல்துறை பாதுகாப்புடன் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதர அத்தியாவசிய பொருள்களும் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க உரிய காவல்துறை பாதுகாப்புடன் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்காத வாகனங்கள், வாகன ஓட்டுனர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை பாதுகாப்புடன் பெட்ரோல்-டீசல் அனுப்பப்படுவதால், அவற்றை பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக வாங்க வேண்டாம். இவற்றை பொதுமக்களுக்கு வழங்காமல், கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது ஆட்சியர்கள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.
இந்த பிரச்சனையில் சுமுக முடிவு ஏற்படவேண்டும்; போராட்டம் என்பது கோரிக்கைகளை வலியுறுத்தி அதில் வெற்றி பெறுவதற்காகத்தானே தவிர, யார், யாரை வீழ்த்தினார்கள் என்று பார்த்து வெற்றிக் கொடி நாட்டுவதற்காக இல்லை என்பதை சிந்தித்து பிரச்சனைகளும், விளைவுகளும் மக்களை எப்படி தொடுகின்றன என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.