மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு இன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், மாலை 4 மணி நிலவரப்படி 60 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடைவிடாது நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் திரண்டு தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
திருமங்கலம் இடைத்தேர்தலைப் பொருத்தவரை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகவும், வன்முறை நிகழ்வுகள் தொடர்பாகவும் அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் பரஸ்பரம் ஒருவரையொருவர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளன. இவை தவிர ஏராளமான புகார்களும் கூறப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை இல்லாத வகையில் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டு, அவர்களுடன் காவல்துறையினரும் சேர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்களில், கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எந்தவித வலியுறுத்தலும், நிர்பந்தமும் இல்லாமல் வாக்காளர்கள் தங்கள் விருப்பம் போலவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் மகிழ்ச்சியுடன் வந்து வாக்களித்ததைக் காண முடிந்தது.
நகரப் பகுதி, கிராமப்பகுதி என்றில்லாமல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆண்களும், பெண்களும் திருவிழா கூட்டம் போல திரண்டு வந்து வாக்களித்தனர்.
திருமங்கலம் பி.கே.என். மேல் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தி.மு.க வேட்பாளர் லதா அதியமான், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இன்றைய வாக்குப்பதிவு அசம்பாவிதம் ஏதுமின்றி, அமைதியான முறையிலும், அதே சமயம் விறுவிறுப்பாகவும் நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.
வாக்குப்பதிவை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மேலிட பார்வையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஒவ்வொரு வாக்குச்சாவடியாகச் சென்று வாக்குப்பதிவு நடைபெறுவதை கண்காணித்தார்.
காலையில் வாக்குப்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 12 விழுக்காடு அளவுக்கு வாக்குகள் பதிவானது. இதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு 40 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்ததாகத் தெரிய வந்துள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46 விழுக்காடு வாக்குகளும், 4 மணி நிலவரப்படி 60 விழுக்காடு வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதன் பின்னர் வாக்களிக்க வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாக்குச் சாவடிகளிலுமே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், அவை அனைத்தும் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவப் படையினரின் உதவியுடன் வாக்குகள் எண்ணப்படும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு, தீவிர பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் திங்கட்கிழமையன்று எண்ணப்படுகின்றன.