எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேலை நிறுத்தத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன், வேலை நிறுத்தத்தை ஒடுக்க கடுமை தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை வன்மையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சரக்குந்துகள் வேலை நிறுத்தம், வாகனங்களுக்கான எரி பொருளை நிரப்ப நீண்ட வரிசை, எரிபொருள் இருப்பு இல்லை என்கின்ற வாசக அட்டைகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தொங்குகின்றது. காரணம் எண்ணெய் வளத்துறையினர் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள்.
நம்நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் 9 நிறுவனங்களுக்கு நவரத்னா எனப் பெயர் சூட்டி அதற்கான விசேஷ விதிமுறைகளும் பின்பற்றப்பட்டது. அந்த நிறுவனங்கள்தான் அரசுக்கு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபத்திற்கு நிர்வாகிகள் தொழிலாளர்கள் ஆகியோரும் காரணம் என்பதால் அந்த லாபத்தில் ஓரளவு அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் அரசு சமீபத்தில் சம்பள சீர்திருத்தம் குறித்து கணக்கிடும் போது இந்த லாபம் ஈட்டும் நிறுவனங்களுடன் நஷ்டத்தையே சந்தித்துக் கொண்டிருக்கும் நிறு வனங்களையும் சமமாக்கி பரிந்துரைத்தது.
பொதுவாகவே சம்பள சீர்திருத்தம் என்றாலே ஏதேனும் கொஞ்சமாவது சம்பள உயர்வு இருக்கும் என எதிர்பார்ப்பது இயற்கை. விசித்திரமான முறையில் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சம்பளம் குறைந்துள்ளது. பணிபுரிபவர்கள் மட்டுமல்ல, நிர்வாகமே கூட சம்பள உயர்வு வரும் என எதிர்பார்த்து முன்பணமாக ஒரு தொகையை தந்தது. மாறாக சம்பளம் குறைந்ததால் ஏற்கனவே நிர்வாகமே தந்த பணத்தை ஊழியர்கள் திரும்பக் கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டிக் காக்கும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுதல் அவசியம்; நியாயமும் கூட. மாறாக அவர்கள் வஞ்சிக்கப்படுவார்களானால் தனியார் துறை நிறுவனங்கள் அவர்களது திறமையை பயன்படுத்திக் கொள்ள அதிக சம்பளம் தர காத்துக் கிடக்கின்றன. இதைத்தான் அரசு சார்பான சில பெரியவர்கள் விரும்புகிறார்ளோ என நான் சந்தேகிக்கிறேன். தனியாரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை அழிக்க முயற்சிக்கும் சிலரது திட்டமோ என சந்தேகிக்கின்றேன்.
எனவே அரசு உடனடியாக போராடும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும். மாறாக வேலை நிறுத்தத்தை ஒடுக்க கடுமை தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.