சென்னை சட்டக்கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் கைது செய்யப்பட்டுள்ள 29 பேரும் ''வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு பொது நூலகம் சென்று அங்குள்ள புத்தகங்களை படிக்க வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் அனைவருக்கும் பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே கடந்த நவம்பர் மாதம் 12ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக சென்னை எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைதான முருகேசன், வெற்றி கொண்டான், இளையராஜா, சித்திரைச் செல்வன், சத்யராஜ், மணிமாறன், ரவிவர்மன் உள்ளிட்ட 29 பேர் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இதேபோல் கடந்தாண்டு காவல்துறை உதவி ஆணையர் ராஜாமணியை சட்டக்கல்லூரி விடுதி மாணவர்கள் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இளையராஜா, மணிமாறன், மாரிமுத்து உள்பட 11 பேர் முன் பிணை கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த இரண்டு மனுக்களும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.சுதந்திரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் சார்பில் அவர்களது பெற்றோர் உத்தரவாத மனு ஒன்றைத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,"எதிர்வரும் காலத்தில் தங்களது மகன்கள் வன்முறை செயல்களில் ஈடுபடமாட்டார்கள்'' என்று கூறியிருந்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி சுதந்திரம், கைது செய்யப்பட்ட 29 மாணவர்களுக்கும் இன்று நிபந்தனையுடன் கூடிய விடுதலை பிணை வழங்கினார். 5 ஆயிரம் ரூபாய்க்கு சொந்த பிணையும், அதே தொகைக்கு ஒரு நபர் பிணையும் செலுத்தி விடுதலை பிணை பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் 4 வார காலத்திற்கு இந்த மாணவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் ஒரு பொது நூலகம் சென்று 2 மணி நேரத்திற்கு புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றும், என்ன புத்தகங்களை படித்தார்கள் என்ற விவரத்தை 4 வார காலம் கழித்து நீதி மன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் கூறியுள்ளார்.