ஈரோட்டில் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாளவாடி, ஆசனூர் மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து டேங்கர் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் பங்க்குகள் தங்களுடைய இருப்பு தீர்ந்ததால் மூடிவிட்டனர். ஒரு சில பங்க்குகளில் மட்டுமே பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.
இதற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையில் நின்று ஒவ்வொறுத்தருக்கும் தலா இரண்டு லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படுவதால் இதற்கு போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர்.
மேலும் ஈரோடு மாவட்டம் தாளவாடி, ஆசனூர் மலைப்பகுதியில் விளையும் உருளைகிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை வேன் மூலம் கொண்டு வந்தனர்.
தற்போது வேன், மூன்று சக்கர ஆட்டோ உள்ளிட்டோரும் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாரம் ஏற்ற மறுப்பதால் இப்பகுதியில் லட்சக்கணக்கான காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாழை, மல்லிகை பூ உள்ளிட்ட பொருட்களும் பாதித்துள்ளது.