கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை கத்தியால் இலங்கை கடற்படையினர் கத்தியால் தாக்கி சித்ரவதை செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று ஜான்போஸ், மில்டன், டென்சிங், ராஜ் ஆகிய மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மாலை 6 மணி அளவில் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் வலைகளை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 5 படகுகளில் இலங்கை கடற்படையினர் எந்திர துப்பாக்கியுடன் அந்த பகுதியில் ரோந்து வந்தனர். அவர்கள் மீனவர்களை கண்டதும் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
பின்னர் அவர்களை எச்சரிக்கும் விதமாக, இந்த பகுதிக்கு ஏன் மீன்பிடிக்க வந்தீர்கள் என்று கூறியபடி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.
அப்போது, படகில் பதுங்கி கொண்ட அவர்கள், தங்கள் வலைகளை அவசர அவசரமாக படகுக்குள் இழுத்தனர். இதில் ஆவேசம் அடைந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் வலை அறுப்பதற்காக வைத்திருக்கும் கத்தியை பறித்து கொண்டு, ராஜ் என்ற மீனவரை குத்தினர்.
அப்போது கத்தியை தடுத்த ராஜிக்கு முழங்கையில் கத்திக்குத்து விழுந்து. வேதனையில் துடித்த ராஜியை பிடித்த மற்ற மீனவர்களை சரமாரியாக தாக்கியதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
பின்னர் இந்த இடத்தை விட்டு உடனே காலி செய்யுங்கள் என்று மிரட்டி விட்டு இலங்கை கடற்படையினர் சென்றனர். உயிர் பிழைத்தால் போதும் என்று கருதி மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்கு வந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.