இலங்கை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, தமிழர்கள் ஏமாளிகளா? என கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு தப்பி வந்த தமிழ் குடும்பத்தினர் அளித்த பேட்டி பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
தமிழக அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமரிடம் அளித்த வேண்டுகோளை பரிசீலித்து பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் அது செயல்படுத்தப்படவில்லை..
தமிழர்கள் ஏமாளிகளா? பிரதமரின் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதா? இதன் காரணமாக கடும் விலையை மத்திய அரசு பெற வேண்டியிருக்கும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று வீரமணி கூறியுள்ளார்.