லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சமாளிக்க அரசு, தனியார் பேருந்துகளில் காய்கறி, பழங்களை ஏற்றிச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க பேருந்துகளை பயன்படுத்திக் கொள்வதற்கு முதலமைச்சர் அனுமதியளித்துள்ளார் என்றார்.
இதையடுத்து, காய்கறி, பழங்களை ஏற்றிச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்து அமைச்சர், அரசு பேருந்துகளில் காய்கறிகளை கொண்டு செல்லும்போது கட்டணம் வசூலிப்பதா, இலவசமாக கொண்டு செல்லலாமா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசிய அறிவிக்கப்படும் என்றார்.
பேருந்துகளில் காய்கறிகளை ஏற்ற மறுக்கும் அரசு, தனியார் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடமும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.