திருமங்கலத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருமங்கலம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்குப் பணம், இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்டவற்றை கட்சியினர் கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தாராளமாக பணம் கொடுப்பதாக அ.இ.அ.தி.மு.க.வும், அதுபோல் அ.இ.அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக தி.மு.க.வும் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்ததாக, இரு தொலைக்காட்சி சேனல்களில் ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு தி.மு.க.வுக்கு தாக்கீது அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்த கோவை எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலர் தண்டபானி மீதும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.