1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்தவரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான பெ.சீனிவாசன் மறைவுக்கு அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகரும், தலைமைக்கழகப் பேச்சாளருமான விருதுநகர் பெ.சீனிவாசன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்க சகோதரர் பெ.சீனிவாசன் பேரறிஞர் அண்ணாவின் அடியொற்றி மாணவப் பருவத்திலேயே தன்னை தீவிர அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அதன் தளகர்த்தராக இருந்து அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. மேலும் திரைப்படத்துறையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
தலைமைக் கழகப் பேச்சாளராக, அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கைகளையும், எதிர்க்கட்சியினரின் மக்கள் விரோதச் செயல்களையும் நாடு முழுவதும் நல்ல முறையில் மக்களுக்கு எடுத்துரைத்தவர். அதேபோல், அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் பயன்பெறும் வகையில் அ.இ.அ.தி.மு.க நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் சிறந்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தவர் ஆவார்.
சீனிவாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று இரங்கல் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.