ஜெயலலிதா, வைகோ மீது தி.மு.க. புகார்
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:38 IST)
திருமங்கலத்தில் தேர்தல் விதிமுறையை மீறியதாகவும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் மு.க.அழகிரி மீது தவறான குற்றச்சாற்று சுமத்தி பிரசாரம் செய்து வரும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ ஆகியோர் மீது தி.மு.க வேட்பாளர் லதா அதியமான், தேர்தல் ஆணைய அதிகாரியிடம் புகார் கூறியுள்ளார்.
திருமங்கலம் தொகுதி தேர்தல் அதிகாரி ராமச்சந்திரனிடம் அவர் கொடுத்த புகார் மனுவில், திருமங்கலம் தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 2 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றன.
வேட்பாளரின் வாகனத்துடன் இத்தனை வாகனங்கள்தான் செல்ல வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை. ஆனால் ஜெயலலிதா பிரசாரத்தில் 60க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஜெயலலிதா வாகனத்தை பின்தொடர்ந்து சென்றது. இது விதிமுறையை மீறிய செயலாகும். ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.