திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை விஸ்வ பிராமணர் தெருவைச் சேர்ந்தவர் கோபால் ஆசாரி (60). இவர் அங்குள்ள ஒரு தங்கநகை பட்டறையில் வேலைபார்த்து வந்தார்.
இவருக்கு சாந்தா, ரேவதி என்ற 2 மனைவிகளும், 4 மகன்கள், 3 மகள்களும் இருந்தனர். இவர்களில் மகள்கள் 3 பேரும், மகன் முருகனும் நேற்று வெளியூருக்குச் சென்று விட்டனர்.
வீட்டில் கோபால் ஆசாரி, 2 மனைவிகளும், பழனி, வெங்கடேஷ், சிவா ஆகிய மகன்களும் இருந்துள்ளனர்.
இன்று காலை கோபால் ஆசாரியின் வீட்டுக் கதவு வெகுநேரமாகியும் திறக்காமல் இருந்ததால், அக்கம்பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தனர்.
வீட்டுக்குள் இருந்து பூச்சி மருந்து நாற்றம் வந்ததையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வீட்டின் கதவை உடைத்து காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பூச்சிமருந்து குடித்த நிலையில் கோபால் ஆசாரி உள்பட அவர்களின் குடும்பத்தினர் 6 பேரும் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. காவல்துறையினர் அவர்களின் உடல்களை மீட்டு, பாளை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப தேவைகளுக்காக கோபால் ஆசாரி, நிறைய பேரிடம் கடன் வாங்கியிருந்ததாகவும், கடன் கொடுத்தவர்கள் வட்டி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், மனம் உடைந்த கோபால் ஆசாரி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்த சம்பவம் பாளையங்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.