சென்னைக்கு ஜனவரி 7ஆம் தேதி வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி குரல் எழுப்பியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றம்சாற்றியுள்ளார்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நெடுமாறன், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் விடுத்த வேண்டுகோளையும் மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனவரி 7ஆம் தேதி சென்னைக்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு' முடிவு செய்துள்ளது என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.