கன்னியாகுமரியில் நீதிமன்ற உத்தரவை மீறி கோயில் ஊர்வலத்துக்கு தடை விதித்த காவல்துறையை கண்டித்தும், மீண்டும் அந்த வழியாக திருவிழா வாகனம் எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியும் வரும் 5ஆம் தேதி நாகர்கோவிலில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம், மதுசூதனபுரம் பகுதி, ஆத்திகாட்டு விளை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரம் எனும் சிறிய ஊரில் சுமார் 150 வீடுகள் உள்ளன. அதில் 8 வீடுகள் மட்டும் கிறிஸ்தவர்கள். இங்கு காலம் காலமாக முத்தாரம்மன் கோயில் கொடை விழா மிகச்சிறப்பாக நடைபெறும்.
இந்த வருடம் புதியதாக பெரிய வாகனம் ஒன்று செய்யப்பட்டு வாகன பவனிக்கு ஏற்பாடாகியது. ஆனால் ஊர்வலப்பாதையில் சர்ச் இருப்பதாக கூறி, கிறிஸ்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
கோயில் ஊர்வலம் செல்லும் பாதையில் இருந்து 250 அடிக்கு கிழக்கில் தான் சர்ச் இருக்கிறது. அந்த சர்ச்சிற்கு முன் நாம் கொண்டுச் செல்லும் வாகனம் போகாது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தெருவை சர்ச்சுக்கு சொந்தமான தெரு என்று கிறிஸ்தவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் அந்த தெருவிற்கு பூமி கொடுத்தவர்கள் இந்துக்கள். இந்த வருடம் திருவிழாவின் போது வாகனம் எடுக்க அரசு தடை விதித்தது. அதையும் மீறி வாகன பவனி அந்த தெரு வழியாக எடுக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி சாலைக்கு வாகனம் கொண்டு வந்த பிறகு காவல்துறை தடியடி நடத்தி வழக்கு தொடர்ந்தார்கள்.
அதன்பிறகு மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது பொது வழி என்றும் வாகன பவனி கொண்டு செல்ல அனுமதியும் பெறப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின்படி அது பொதுப்பாதை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திருவிழா நடத்த முயன்ற போது காவல்துறை துணை கண்காணிப்பாளர் அது குறுகிய பாதை என காரணம் கூறி மீண்டும் காவல்துறையால் தடை விதிக்கப்பட்டது. எனவே பிள்ளையார்புரம் மக்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை மீறி காவல்துறை தடுத்தது நீதிமன்ற அவமதிப்பாகும். ஆகவே மீண்டும் அந்த வழியாக திருவிழா வாகனம் எடுத்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவை மீறிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையினை வலியுறுத்தி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகர்கோவிலில் வரும் 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் நானும் கலந்து கொள்கிறேன் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.