திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு வரும் 4ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, வரும் 4ஆம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறார் என்றும் அன்றைய தினம் காலை 9 மணியளவில் திருமங்கலம் தொகுதி காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 10 மணி முதல் 2 மணி வரை கப்பலூர், திருமங்கலம், செங்கப்படை ஆகிய பகுதிகளிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கள்ளிக்கொடி, குறாயூர் ஆகிய பகுதிகளிலும் தங்கபாலு பிரசாரம் மேற் கொள்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
வரும் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்குடி, பாரப்பத்தி ஆகிய பகுதிகளிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை வலியார்பத்தி பகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து திருமங்கலம் தேவர் சிலை அருகே நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.