தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து அதிரடியாக மாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மதுரையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
திருமங்கலம் தொகுதியில் கடந்த வாரம் நடந்த மோதலில் காவல்துறை, பல்வேறு கட்சி பிரமுகர்களின் வாகனங்கள் சேதமடைந்தன. அதைத் தொடர்ந்து தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் தேர்தல் அதிகாரிகளிடம் பரஸ்பரம் புகார் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் உத்தரவுபடி, மதுரை காவல்துறை துணை தலைமை ஆய்வாளர் (டி.ஐ.ஜி.) எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி) எம்.மனோகர், திருப்பரங்குன்றம் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சுந்தரேசன் ஆகியோரை தமிழக அரசு இடம் மாற்றம் செய்தது.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக இருந்த அமரேஷ் பூஜாரி மதுரை சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.
சென்னை பூக்கடையில் துணை ஆணையாளராக இருக்கும் பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணைக் கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளராக இருந்த பிரவீண்குமார் அபிநவ், திருப்பரங்குன்றம் உதவி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.