திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற, பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தே.மு.தி.க. துணை பொதுச் செயலர் கிருஷ்ணன் இன்று மத்திய தேர்தல் பார்வையாளர் சுனில் குமார் புஜ்வாலிடம் புகார் மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமங்கலம் தொகுதியில் போலி வாக்களர்கள் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று குற்றம்சாற்றினார்.
வன்முறையாளர்களைக் கொண்டு எப்படியும் குறுக்கு வழியில் வெற்றிபெற வேண்டும் என்று ஆளும் கட்சியினர் கருதுவதால் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவும், மக்கள் விருப்பு வெறுப்பு இன்றி வாக்களிக்க ஏதுவாகவும், தேர்தல் ஆணையம் கூடுதலாக நேர்மையான கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என்றும் தேர்தல் பார்வையாளரிடம் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கிருஷ்ணன் தெரிவித்தார்.