வறுமை அகன்று வளம் பெருகட்டும்: தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
, புதன், 31 டிசம்பர் 2008 (16:35 IST)
இந்த புத்தாண்டில் தீவிரவாதம், வன்முறை, வறுமை, அறியாமை போன்ற தீமைகள் அகன்று அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்று தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா : வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இனிமையும் பொங்க புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு : மக்கள் நலன் என்னும் மாபெரும் சக்தி நாடெங்கும் ஓங்கி உயர்ந்திட, அமைதி, சமாதானம், மத நல்லிணக்கம் மிளிர்ந்திட அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என்று இந்த புத்தாண்டில் உறுதியேற்போம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் : வளமும், மனித நேயமும் தமிழ் சமுதாயம் படைத்திட புத்தாண்டில் நமக்கு சக்தியையும், வெற்றியையும் தந்திட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ : மேல்நாட்டு கலாச்சாரத்தால் தமிழ் பண்பாட்டுத்தளம் சிதைந்து வரும் அவலத்தை போக்க வேண்டும். உலகின் மிகப் பழமையான தமிழர் நாகரிகத்தின் அடிப்படை அறநெறிகளை பாதுகாக்க, ஒவ்வொரு தமிழ் குடும்பமும் இந்த புத்தாண்டில் உறுதி மேற்கொள்ள வேண்டும்.முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் : இப்புத்தாண்டில் தீவிரவாதம், வன்முறை, வறுமை, அறியாமை போன்ற தீமைகள் அகன்று அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட பா.ஜ.க. சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் : 2009ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக முக்கியமான ஆண்டாகும். நாடாளுமன்றத் தேர்தல் இந்தாண்டில் தான் நடைபெறவுள்ளது. எல்லோருக்கும் பொதுவான லஞ்ச, ஊழலற்ற நல்லாட்சியின் மூலமாகவே அடுத்த தலைமுறையின் வருங்காலத்தை நம்மால் உயர்த்த முடியும். இந்த அடிப்படையிலேயே தே.மு.தி.க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தே.மு.தி.க நேர்மையானவர்களை கொண்டு அரசியல் நடத்த பாடுபட்டு வருகிறது. இப்புத்தாண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய திருப்புமுனையாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.