பொதுமக்களும், வாகன ஒட்டுநர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிச் சாலை விதிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி, 2009ஆம் ஆண்டு விபத்தில்லா ஆண்டாக விளங்கிட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவமும், அவசியமும் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரித் திங்கள் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
1.1.2009 முதல் 7.1.2009 வரை கடைப்பிடிக்கப்படும் இந்த ஆண்டின் 'சாலைப் பாதுகாப்பு வார விழா' சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் சிந்தனையைத் தமிழக மக்களிடம் வளர்ப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர். உயிரிழப்பு என்பது உயிரிழந்தவர்களின் குடும்பத்தை மட்டும் பாதிப்பதில்லை; ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கிறது.
எனவே, சாலை விபத்துகள் தடுக்கப்பட வேண்டும்; இதற்குச் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் வேண்டும்; நடந்து செல்வோர், மிதிவண்டியில் செல்வோர், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், பேருந்து, லாரி இதர கனரக மோட்டார் வாகனங்களின் ஒட்டுநர்கள் அனைவரும் சாலை விதிகளைத் தவறாமல் கடைபிடித்திடல் வேண்டும். இதனை வலியறுத்துவதுதான் சாலைப் பாதுகாப்பு வாரம்.
இந்த ஆண்டின் சாலைப் பாதுகாப்பு வாரத்தில் சாலைகளை மேம்படுத்தல், சாலைச் சின்னங்களை அமைத்தல், சாலைச் சந்திப்புகளில் குறியீட்டு விளக்குகளை அமைத்தல் முதலிய பணிகளுடன் அரசின் பல்வேறு துறைகளையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்துச் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
அரசின், இத்தகைய முனைப்பான நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களும், வாகன ஒட்டுநர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிச் சாலை விதிகளைத் தவறாமல் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
2009ஆம் ஆண்டு விபத்தில்லா ஆண்டாக விளங்கிட வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.