டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், வரும் 5ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடாது என்று அறிவித்துள்ளது.
நாமக்கல்லில் நடந்த தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மகாசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5ஆம் தேதி முதல் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவு அளித்து வேலை நிறுத்தம் வெற்றி பெற பாடுபடுவதென தீர்மானிக்கப்பட்டது.
மாநில எல்லை சோதனை சாவடிகளில் வசூலிக்கப்படும் மெக்கானிக்கல் வரி வசூலை தடுத்து நிறுத்த வேண்டும். மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்தி, அதிக பாரம் ஏற்றுவதை கட்டுப்படுத்த வேண்டும்.
தேசிய அனுமதி பெறப்பட்டு உள்ள வாகனங்களுக்கு 2 ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் என்ற மோட்டார் வாகன சட்ட விதியினை திருத்தம் செய்து, ஒரு ஓட்டுனர் மட்டுமே போதுமானது என கொண்டு வர மத்திய அரசை கேட்டுக் கொள்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்ததும் செய்தியார்களிடம் பேசிய மாநிலத் தலைவர் தர்மலிங்கம், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனவரி 5ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்றே முக்கால் லட்சம் லாரிகள் ஓடாது என்றார்.