திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா வரும் 3ஆம் தேதி முதல் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி அவர் ஜனவரி 3, 4, 5 ஆகிய நாட்களில் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஊர் ஊராகச் சென்று அ.இ.அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.
தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முதல் நாளான 3ஆம் தேதியன்று பெருங்குடி, கைத்தறிநகர், நிலையூர், சம்பகுளம், வளையங்குளம், எலியார் பத்தி, பாரபத்தி, கூடக்கோவில், சின்ன உலகாணி உள்ளிட்ட 17 இடங்களில் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கிறார்.
மறுநாள் 4ஆம் தேதி புளியங்குளம், செக்காணூரணி, சிக்கம்பட்டி, அனுப்பப்பட்டி காலனி, கரடிக்கல், கீழ ஊரப்பனூர், பள்ளக்காபட்டி, மேல் உரப்பனூர் உள்ளிட்ட 12 இடங்களில் ஜெயலலிதா பேசுகிறார்.
5ஆம் தேதி சிவரக் கோட்டை, அகத்தாப்பட்டி, வாலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, மேலப்பட்டி உள்ளிட்ட 12 இடங்களில் பேசிவிட்டு இறுதியாக வேப்பங்குளம், இலுப்பங்குளம் ஆகிய இடங்களில் பேசி தன்னுடைய சூறாவளி தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.
அதன் தொடர்ச்சியாக 6ஆம் தேதி திருமங்கலத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேச உள்ளார். இக்கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.