மக்களவைத் தேர்தலில் சமநீதி கூட்டணி 30 தொகுதிகளில் போட்டி
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
மக்களவைத் தேர்தலில் சமநீதி கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
ஈரோட்டில் நடைபெற்ற உழைப்பாளி மக்கள் கட்சியின் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ராமகோபால தாண்டாள்வார் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் தனியரசு, உழவர் உழைப்பாளர் கட்சியின் துணை தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் ராமகோபால தாண்டாள்வார் பேசுகையில், தற்போது தமிழக மக்கள் சமநீதி கூட்டணி என்ற ஒரு அணியை உருவாக்கியுள்ளோம். இதில் மக்கள் தேசம் கட்சி, தமிழ்நாடு முத்தரையர் சங்கம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகிய அமைப்புகள் உள்ளது.
விரைவில் பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி, அகில இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சி, ஜனநாயக மக்கள் தமிழ்தேசம் ஆகிய கட்சிகள் இணைய உள்ளது. இந்த கூட்டணி சார்பில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாண்டிசேரி உட்பட முப்பது தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.