திருமங்கலத்தில் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்ட அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் உள்பட 51 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பணியை முடித்து விட்டு மேலூர் தொகுதி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சாமி, தனது ஆதரவாளர்களுடன் வாகனங்களில் வந்து கொண்டிருந்தார். மதுரை ரிங்ரோடு மண்லோ நகர் சந்திப்பில் வந்தபோது அவர்களது வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது, காவல்துறையினருக்கும், அ.இ.அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலில் பெருங்குடி காவல்துறை ஆய்வாளரின் ஜீப் உள்பட 5 வாகனங்கள் உடைக்கப்பட்டன.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சாமி உள்பட 52 பேர் மீது 353வது பிரிவு (அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல்) உள்பட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் எலியார்பத்தியில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அவரது ஜீப் மீது ஒரு கும்பல் சரமாரியாக கற்களை வீசி தாக்கியது.
இந்த தாக்குதலில் நடிகர் ராமராஜன், வேட்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
இந்த தாக்குதலில் மருங்காபுரி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி உள்பட 4 வாகனங்கள் சேதம் அடைந்தன.
இதுகுறித்து கூடக்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் தொகுதியில் இதுவரை நடந்த வன்முறைக்கு 252 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.