இலங்கைத் தமிழர்களை உரிய நேரத்தில் பாதுகாக்க மத்திய அரச உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் மற்றும் ஆதரவாக பேசுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையை வரவேற்பதாக கூறினார்.
முதல்வரின் இந்த அறிக்கைக்குப் பிறகு தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசுவது குறைந்து விட்டது என்றும் அவர் கூறினார்.
சத்தியமூர்த்தி பவன் மீது நடந்த தாக்குதலில் விடுதலைச் சிறுத்தை தொண்டர்களுக்கு தொடர்பில்லை என்று திருமாவளவன் கூறிவருகிறார். ஆனால் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்தார்.
தேர்தலின் போது ஓட்டுப்போட வாக்களர்களுக்கு பணம் கொடுத்ததாக எந்த அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் கூறப்படுவது பொதுவான குற்றச்சாட்டு என்று கூறிய இளங்கோவன், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க யாரெல்லாம் பணம் கொடுத்தார்களோ அவர்கள் எல்லாம் வெற்றிபெற முடியாது என்றும் இளங்கோவன் கூறினார்.