இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு காப்பாற்ற தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என். வரதராஜன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்துள்ள முதல்வர் கருணாநிதி, தி.மு.க. அரசு இலவச வீட்டுமனைப் பட்டா மட்டும் அல்ல தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை அளித்ததோ அவை அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.
திருமங்கலம் தேர்தல் பிரசாரத்தின் போது வரதராஜன் பேசியதை இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் கருணாநிதி, இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் தற்போது எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. முகாமில் இருப்பதால் இவ்வாறு கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
2001-06 ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. அரசு வழங்கிய 3.61 லட்சம் வீட்டுமனைப் பட்டாவுடன் ஒப்பிடுகையில், 1996-2001 ஆம் ஆண்டில் 9.50 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்களை தி.மு.க. அரசு வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் 2006ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது இதுவரை 6,46,785 இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கியுள்ளது. அரசு உபயோகத்துக்குப் பயன்படாத அரசு நிலத்தில் வீடு கட்டியுள்ளவர்களுக்கும் பட்டா வழங்க இந்த அரசு முன்வந்துள்ளது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும் 1.74 லட்சம் ஏழை விவசாயிகள் குடும்பத்தினர் தாங்கள் விவசாயம் செய்வதற்காக 2 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை இலவசமாக தி.மு.க. அரசு வழங்கியுள்ளது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இடதுசாரிக் கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநில அரசுகள் வழங்கியுள்ள இலவச வீட்டுமனைப் பட்டா எண்ணிக்கையைவிட தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு அதிக அளவில் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலவச வீட்டுமனைப் பட்டா மட்டும் அல்ல தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதோ அவை அனைத்தையும் தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.