திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற ஜனவரி 7 ஆம் தேதி 5 மணிக்கு வெளி ஆட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தொகுதிக்கு சீல் வைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரத்தை முடிக்க வேண்டும். அதன்படி, ஜனவரி மாதம் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள திருமங்கலம் தொகுதியில் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட வேண்டும்.
அப்போதுதான் தொகுதி வாக்காளர்கள் சாதாரணமாக வாக்களிக்க முடியும். தற்போது இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர். அவர்களால் நியாயமான, நேர்மையான வாக்குப்பதிவு நடப்பதற்கான சூழல் பாதிக்கப்படலாம்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர் நபர்கள் ஜனவரி 7ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, வெளியூர் நபர்கள் நுழையாதவாறு தொகுதி சீல்வைக்கப்படும் என்று நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.