திருமங்கலம் தொகுதியில் 25,000 புதிய தமிழகம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் இத்தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக புதிய தமிழகம் இருக்கும் என்றும் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கரூரில் நேற்று நடந்த கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருமங்கலம் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஜனவரி 3ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் கூட்டணி வைப்பது என்பது பற்றி பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்படும் என்றார் கிருஷ்ணசாமி.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் பிளவுபட்டு இருப்பதற்கு வருத்தம் தெரிவித்த கிருஷ்ணசாமி, இந்த பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு மத்திய- மாநில அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.