தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் அறிஞர்கள், சமூகநீதிக்கு உழைப்போருக்கும் வழங்கப்படும் விருதுகளை பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2009-ம் ஆண்டுக்கான "அய்யன் திருவள்ளுவர் விருது'' முனைவர் பொற்கோவுக்கு வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோரில் சிறந்தோரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் அரசு விருதுகள் வழங்கிப் போற்றிடும் சீரிய திட்டம் முதலமைச்சர் கருணாநிதியால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, 2009-ம் ஆண்டுக்கான "அய்யன் திருவள்ளுவர் விருது'' முனைவர் பொற்கோவுக்கு வழங்கிட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
2008-ம் ஆண்டுக்கு - சமூக நீதிக்கான "தந்தை பெரியார் விருது'' இயக்குநர் ஞான.ராஜசேகரனுக்கும்; "அறிஞர் அண்ணா விருது'' அ.மறைமலையானுக்கும் வழங்கிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
''அம்பேத்கர் விருது'' எழுத்தாளர் சோலைக்கும், "பெருந்தலைவர் காமராசர் விருது'' கோபண்ணாவுக்கும்; "பாரதியார் விருது'' முனைவர் இரா.மணியனுக்கும், தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது'' முனைவர் ச.பா.அருளானந்தத்துக்கும்; "பாவேந்தர் பாரதிதாசன் விருது'' கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும்; முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது'' பேராசிரியர் பழமலய்க்கும் வழங்கப்படும்.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன், தங்கப் பதக்கமும் தமிழக அரசின் சார்பில் அணிவிக்கப்படும். 15.1.2009, திருவள்ளுவர் தினத்தன்று சென்னை-கலைவாணர் அரங்கத்தில் நிதியமைச்சர் பேராசிரியர் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகளை முதலமைச்சர் கருணாநிதி வழங்கிச் சிறப்பிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.