திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவும், மக்கள் விருப்பு வெறுப்பின்றி வாக்களிக்க ஏதுவாகவும், இந்திய தேர்தல் ஆணையம் கூடுதலாக நேர்மையான கண்காணிப்பாளர்களை நியமிக்கவும், துணை ராணுவத்தினரை ஈடுபடுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திருமங்கலம் தொகுதியில் பல்வேறு இடங்களில் அ.இ.அ.தி.மு.க.வினரின் 35க்கும் மேற்பட்ட வாகனங்களை, மிசா பாண்டியன், மன்னன், எஸ்ஸார் கோபி ஆகியோர் தலைமையில் மிகப் பெரிய ரவுடி கும்பல் வழிமறித்து, வாகனங்களில் இருந்தவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் அ.இ.அ.தி.மு.க. ஈரோடு மாவட்ட செயலாளர் கே.எஸ்.பழனிச்சாமி, தேனி மாவட்டம் சின்னமனூர் நகர கழக செயலாளர் வேதநாயகம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செங்கம் ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை பேச்சாளர் வெங்கட்ராமன், உறுப்பினர்கள் சங்கர், வெள்ளைக்கண்ணு, வேலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சிவகுமார், தூத்துக்குடி மாவட்ட உறுப்பினர் ரவி ஆகியோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணியையும் தி.மு.க.வினர் தாக்கியுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இதுதவிர, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், திருமங்கலம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அ.இ.அ.தி.மு.க.வினரை தி.மு.க.வினர் கடத்திச் செல்ல முயற்சிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரே தாக்கப்படலாம் என்ற அளவில் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவும், மக்கள் விருப்பு வெறுப்பின்றி வாக்களிக்க ஏதுவாகவும், இந்திய தேர்தல் ஆணையம் கூடுதலாக நேர்மையான கண்காணிப்பாளர்களை நியமிக்கவும், துணை ராணுவத்தினரை ஈடுபடுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.