திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 9ஆம் தேதி (ஜனவரி) இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்தத் தொகுதியில் முதல் அமைச்சர் கருணாநிதி வரும் 5ஆம் தேதி பிரசாரம் செய்யவுள்ளார்.
திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் இத்தகவலை தெரிவித்தார்.
வரும் 5ஆம் தேதி திருமங்கலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல் அமைச்சர் கருணாநிதி பங்கேற்று, திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து வாக்கு சேக்ரிக்க உள்ளதாக ஸ்டாலின் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
வரும் ஒன்று, 2ஆம் தேதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சந்திரசேகரும், 3, 4ஆம் தேதிகளில் நடிகர் பாக்கியராஜூம், 6, 7-ம் தேதிகளில் நடிகர் நெப்போலியனும் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.